Friday, October 29, 2021

ஶ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ர விளக்கம்( சுலோகம் 6 - 10):

சுலோகம்:6 

ராஹு கிரஸ்த திவாகரேந்து ஸத்ருசோ மாயா ஸமாச்சாதநாத்

ஸந்மாத்ர: கரணோப சம்ஹரணதோ யோ பூத் ஸுஷுப்த: புமான் |

ப்ராகச்வாப் சமிதி பிரபோத ஸமயே : ப்ரத்யபிக்ஞாயதே

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ||


राहुग्रस्तदिवाकरेन्दुसदृशो मायासमाच्छादनात्

सन्मात्रः करणोपसंहरणतो योऽभूत्सुषुप्तः पुमान् 

प्रागस्वाप्समिति प्रबोधसमये यः प्रत्यभिज्ञायते

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ६॥


மாயையால் மறைக்கப்பட்டதனால் எந்த புருஷனானவர் ராஹுவால் மறைக்கப்பட்ட சூரிய சந்திரனை போன்றவராகவும் கரணங்கள் அடங்கியதால் உறக்க நிலையில் ஸத்சொரூபமாக மட்டும் இருக்கிறாரோ, எவர் விழிப்பு நிலையில் முன் நான் சுகமாக தூங்கினேன் என்று ஞாபகப்படுத்திக் கொண்டு இருந்து வருகிறாரோ அந்த குருவான ஶ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு (என்னுடைய) இந்த நமஸ்காரம் (சமர்ப்பிக்கப்படுகிறது).


=> முகவுரை:

இந்த சுலோகத்தின் சாரம் என்னவெனில் இங்கு சூன்ய வாதம் நிஷேதம் செய்யப்படுகிறது. தர்க்க சாஸ்திரத்தில்ப்ரதம மல்ல நியாயம்என்றொரு நியாயம் உள்ளது. ஏற்கனவே சிறு சிறு ஆட்களையெல்லாம் வென்றவனை ஜெயித்துவிட்டால் அது மற்றவர்களையெல்லாம் வென்றதற்கு சமம் ஆகிறது. இதன்படி உடல், பிராணன், மனம் முதலிய அனாத்மாக்களை ஆத்மா என கூறிய அனைத்து வாதத்தையும் ஏற்கனவே நிராகரணம் செய்துவிட்ட நின்று கொண்டிருக்கும் சூன்யவாதத்தை நீக்குவதன் மூலம் முன் சுலோகத்தில் கூறிய அனைத்து வாதத்தையும் நீக்குகிறோம்

சூன்ய வாதம்: ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிப்பவனும், அனுபவிக்கப்படும் பொருளும் இல்லை. அதாவது ப்ரமாதா, ப்ரமாணம் மற்றும் ப்ரமேயம் என எதுவும் அங்கு இல்லை. சூன்யம் மட்டுமே உள்ளது.

பதில்: 

(1) ஒன்றை நாம் அனுபவிக்காமலிருக்க இரண்டு காரணங்களைக் கூறலாம். (i) அனுபவிக்கப்படும் பொருளே இல்லாமல் இருத்தல். (ii) அனுபவிக்கப்படும் பொருளானது இருந்தும், அது மறைக்கப்பட்டிருந்தால் அது நம் அனுபவத்திற்கு வராமலிருக்கலாம்

இதில் ஆழ்ந்த உறக்கத்தில் எதுவும் இல்லாததற்கு காரணமாக சூன்யவாதி முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ள காரணத்தை கூறுகிறான். நாம்(வேதாந்தி) இரண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ள காரணத்தை கூறுகிறோம். எனில் அது இருந்தும் எப்படி மறைக்கப்படுகின்றது? அதற்கு ஆசிரியர் உதாரணத்துடன் பதிலுரைக்கிறார்


ராஹு கிரஸ்த திவாகரேந்து சத்ருசோ மாயா சமாச் சாதநாத்


சூரியனும் சந்திரனும் ராஹுவினால் மறைக்கப்பட்ட காரணத்தினால் எப்படி தெரியவில்லையோ அதுபோல ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிப்பவன் மறைக்கப்பட்டதனால் அவனை நாம் அறிவதில்லை


=> ஆழ்ந்த உறக்கத்தில்நான்இருந்தேன் என நிரூபித்தல்:

ஆழ்ந்த உறக்கத்திலும்நான்இருந்தேன் என்பதை நிரூபணம் செய்ய, முதலில் 3 வார்த்தைகளை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

(1) ஞானம் () ப்ரத்யக்ஷம் - வெளிவிஷயத்தை நேரடியாகப் பார்த்தவுடன், மனதில் ஏற்படுகின்ற அறிவிற்கு ஞானம் அல்லது ப்ரத்யக்ஷம் என்று பெயர். .கா., ராமசாமி என்பவரை முதல்முறையாக நேரடியாகப் பார்க்கும்போது தோன்றும் எண்ணம். Cognition. 

(2) ஸ்ம்ருதி - ஏற்கனவே ஏற்பட்ட ஞானம் மனதில் ஸம்ஸ்காரமாக, ஞாபக சக்தியாக இருக்கிறது. அனுபவிக்கப்பட்ட பொருளை மனதில் நினைத்துப் பார்த்தல் ஸ்ம்ருதி என்று பெயர். .கா., அடுத்த நாள்ராமசாமியை தெரியுமா?’ என்ற கிருஷ்ணசாமியின் கேள்விக்கு, நேற்று பார்த்த ராமசாமியை நினைவுபடுத்திதெரியும்என பதிலுரைப்பது.

(3) ப்ரத்ய பிக்ஞா - ஏற்கனவே அனுபவிக்கப்பட்ட ஒன்று, மீண்டும் அனுபவத்திற்கு வரும்பொழுது ஸ்ம்ருதியின் துணைகொண்டு அறிந்து கொள்வதற்கு பெயர் ப்ரத்ய பிக்ஞா. .கா., மூன்றாம் நாள் மீண்டும் ராமசாமியை பார்க்கும் போது, ஏற்கனவே பார்த்த ஞாபகத்தின் துணைக்கொண்டு மனதில் வரும் எண்ணத்தினால் அவரை அறிந்துகொள்வது. Re-Cognition. 

ப்ரத்ய பிக்ஞா = ப்ரத்யக்ஷம் () ஞானம் + ஸ்ம்ருதி:


காலையில் விழித்தவுடன், ‘நான் நன்கு உறங்கினேன்என்கிறோம். இதில்நான்என்பது ப்ரத்ய பிக்ஞா-வுக்கு பொருளாகிறது. உறக்கம் என்பதுஸ்ம்ருதி’-க்கு பொருளாகிறது. ஸ்ம்ருதி-யின் லக்ஷணம், நான் ஒன்றை அனுபவித்தேன் ஆனால் இப்போது அதை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அது என் கண்முன் கிடையாது; ஞாபகத்தில் மட்டுமே உள்ளது. ஆகவே உறக்கத்தை நான் அனுபவித்தேன்; ஆனால் இப்போது நான் அதைக் கூறும்போது நான் உறங்கிக் கொண்டிருக்கவில்லை.

ப்ரத்ய பிக்ஞா-வின் லக்ஷணம், ஏற்கனவே அனுபவித்த ஒன்று, இப்போது கூறும்போதும் அனுபவித்திலிருக்க வேண்டும். ஆகவே தூங்கும்போது இருந்த  ‘நான்’, இப்போதுநான் நன்கு உறங்கினேன்என்று கூறும்போதும் அதேநான்அனுபவத்திலேயே இருக்கிறது. அப்படியெனில்நான்ஆழ்ந்த உறக்கத்தின் போதும் இருந்தேன்; அதாவது விழிப்பு நிலை, உறக்கம் என்ற இரண்டு அவஸ்தையிலும் நான் இருக்கின்றேன். அனுபவிக்காத ஒரு விஷயம், ஸ்மிருதிக்கும் வராது, ப்ரத்ய பிக்ஞாவிற்கும் வராது

எனில் ஆழ்ந்த உறக்கத்தில்நான்இருந்தும் ஏன் எனக்கு தெரியவில்லை? கரணங்கள் ஒடுக்கத்தை அடைந்திருந்த காரணத்தினால்நான்இருந்தும் மறைக்கப்பட்டிருந்தேன். இப்போது விளக்கத்திற்குச் சென்றால்


விளக்கம்:


ராஹு கிரஸ்த திவாகரேந்து ஸத்ருசோ மாயா ஸமாச்சாதநாத்


சூரிய கிரஹணம் மற்றும் சந்திர கிரஹணம் சமயத்தில் ராகுவினால் மறைக்கப்பட்ட சூரிய சந்திரன்(ராஹு கிரஸ்த திவாகர இந்து), அவைகள் மறைக்கப்பட்ட காரணத்தினால் நம்மால் அனுபவிக்கப்படவில்லை. அதற்குச் சமமானது(சத்ருச:)


ஸந்மாத்ர: கரணோப சம்ஹரணதோ யோ பூத் ஸுஷுப்த: புமான்

எந்த ஜீவன்/மனிதன் (: புமான்), ஸத் சொரூபமாக மட்டும் இருந்துகொண்டு(ஸந்மாத்ர:) உறங்கியவன் ஆகிவிட்டான்(ஸுஷுப்த: அபூத்) மனம் எனும் கரணம் ஒடுங்கிவிட்ட காரணத்தினால்(கரண உபசம்ஹரண :), ராகுவினால் மறைக்கப்பட்ட சூரிய சந்திரனைப்போல அவன் மறைக்கப்பட்டவன்போல் இருக்கின்றான். மாயையினால் நன்கு மூடப்பட்டிருக்கின்றான்(மாயா சமாச் சாதநாத்). மாயையின் சொரூபம் அக்ஞானம்; ஆகவே உறக்கத்தில் இவன் அறியாமையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான். மாயையின் இரு சக்தியில் ஒன்றான விக்ஷேபமும்கூட செய்ய முடியாதவளவு, கரணங்கள் ஒடுக்கப்பட்டதனால் மாயையினால் நன்கு மூடப்பட்டுள்ளான்.

ஆகவே ஆழ்ந்த உறக்கத்தில்நான்இருக்கின்றேன்; ஆனால் கருவிகள் ஒடுங்கிவிட்ட காரணத்தினால், இருக்கின்றேன் என்ற ஞானம் கிடையாது.


ப்ராகச்வாப் சமிதி பிரபோத ஸமயே : ப்ரத்யபிக்ஞாயதே


இதற்குமுன் நான் உறங்கினேன் என்று(ப்ராக் அச்வாப்சம் இதி) இந்த ஜாக்ரத் அவஸ்தையில் யார் ஞாபகப்படுத்தி/புரிந்து கொள்கிறாரோ (பிரபோத ஸமயே : ப்ரத்யபிக்ஞாயதே)

உறங்கிக் கொண்டிருந்த அந்த நானே இந்த விழிப்புநிலையில் இருக்கின்ற இந்த நானாக இருக்கின்றேன் என யார் அறிந்து கொள்கிறாரோ


தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்திக்கு எனது நமஸ்காரம் இருக்கட்டும்.

இப்படிப்பட்ட ஜீவ சொரூபமாகவே இருக்கின்ற தக்ஷிணாமூர்த்திக்கு நமஸ்காரம் எனக் கூறி ஜீவ-ஈஷ்வர ஐக்கியத்தை செய்கின்றார்

————————————————————————————————————————————————————————


சுலோகம்:7

பால்யாதிஷ்வபி ஜாக்ரதாதிஷு ததா ஸர்வாஸ்வவஸ்தாஸ்வபி

வ்யாவ்றுத்தா ஸ்வனு வர்தமான மஹமித்யம்த: ஸ்புரம்தம் ஸதா |

ஸ்வாத்மானம் ப்ரகடீகரோதி பஜதாம் யோ முத்ரயா பத்ரயா

தஸ்மை ஶ்ரீ குருமூர்தயே நம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே ||


बाल्यादिष्वपि जाग्रदादिषु तथा सर्वास्ववस्थास्वपि

व्यावृत्तास्वनुवर्तमानमहमित्यन्तः स्फुरन्तं सदा 

स्वात्मानं प्रकटीकरोति भजतां यो मुद्रयाभद्रया

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ७॥


மாறி மாறி வருகின்ற இளமைப்பருவம் முதலியவைகளிலும் அவ்விதமே விழிப்பு முதலிய எல்லா அவஸ்தைகளிலும் தொடர்ந்து வருகின்றதும், உள்ளே எப்பொழுதும்நான்என்று விளங்கி வருகின்றதான தனது ஆத்ம தத்துவத்தை சிஷ்யர்களுக்கு எவர் மங்களமான சின் முத்திரையினால் வெளிப்படுத்திக் காட்டினாரோ அந்த குருவான ஶ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு (என்னுடைய) இந்த நமஸ்காரம் (சமர்ப்பிக்கப்படுகிறது).


=> முகவுரை:

இந்த சுலோகத்தில் மீண்டும்த்வம்பத விவேகம், ஜீவாத்ம சொரூப விவேகம், யுக்தியுடன் செய்யப்படுகிறது. யார் ஒன்றை அனுபவிக்கிறார்களோ அவர்கள்தான் அந்த அனுபவத்தை மற்றவர்களுக்குச் சொல்லமுடியும். சூன்யவாதி, ஆழ்ந்த உறக்கத்தில்நான்எனும் அனுபவம் இல்லையாதலால் அனைத்தும் சூன்யம் என்று கூறினான். அதை நிராகரணம் செய்யும் பொருட்டு, ‘நான்என்ற அஹங்காரமானது ஜாக்ரத்(விழிப்பு நிலை), ஸ்வப்ன(கனவு) மற்றும் சுசுப்தி(ஆழ்ந்த உறக்கம்) இந்த மூன்று அவஸ்தையிலும் தொடர்ந்து இருப்பதாக கூறினோம். மேலும்எது தொடர்ந்து இருக்கின்றதோ அது சத்தியம்என கூறப்படுவதால் இந்த மூன்று நிலையையும் அனுபவிப்பவனாக இருக்கும் அஹங்காரம்தான் ஆத்மாவா? என்ற கேள்வியானது சந்தேகத்தை விளைவிக்கலாம். இதை ஆசிரியர் ஒரு யுக்தியுடன் நீக்குகிறார். அந்த யுக்தியானது, ‘வ்யாவ்ருத்தி-அனுவ்ருத்தி நியாய:என்பதாகும். இதுவேஅந்வய-வ்யதிரேக நியாயம்என்றும் அழைக்கப்படும்

இதை விளக்க ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். இந்த ஸ்தூல உடலை வியாபித்துள்ள சைத்தன்யமும்(அறிவும்), இந்த உடலும் ஒன்றா? அல்லது வேறுபட்டதா? இது பிரிக்கக் கூடியதா? ஜாக்ரத் அவஸ்தை முழுதும் உடலும் இந்த அறிவும் சேர்ந்தே அனுபவிக்கப்படுவதாக உள்ளது. ஸ்வப்ன அவஸ்தையில் அறிவு மட்டுமே செயல்படுகிறது, ஆனால் இந்த ஸ்தூல உடல் ஜடமாக ஆகிவிடுகிறது. சரீரத்திலிருக்கின்ற சைத்தன்யம் அதனோடு சம்பந்தப்படவில்லை. இதிலிருந்து ஸ்தூல உடலும் அதிலிருக்கின்ற சைத்தன்யமும் வேறு வேறு என்பது தெளிவாகிறது. இவ்விதம் வ்யாவ்ருத்தி-அனுவ்ருத்தி நியாயத்தின் மூலமாக இருவேறு நிலையில் நின்று இரண்டும் பிரித்துக்காட்டப்படுகிறது. ஆகவே ஒன்றாகவே இருப்பதுபோலத் தெரியும் இரண்டையும் வேறுபடுத்திக் காட்ட, இந்த வ்யாவ்ருத்தி-அனுவ்ருத்தி நியாயமானது பயன்படுத்தப்படுகிறதுப்ருதக்துவ சித்தி:. இது முதல் படி. இப்போது இதில் எது சத்தியம்? எனும்போது, எது தொடர்ந்து இருக்கின்றதோ அது சத்தியம். அனுவ்ருத்தி என்றால் தொடர்ந்து இருத்தல்; வ்யாவ்ருத்தி என்றால் இல்லாமல்போதல்; அதன் இருப்பு ஒரு குறிப்பிட்ட இடத்தில் இல்லாமல்போதல். இதைக்கொண்டு ஆசிரியர், சைத்தன்யம் தொடர்ந்து உள்ளது; மற்ற அவஸ்தைகள் வந்து வந்து செல்கின்றது எனக் காட்டுகிறார். ‘ஆத்மா’ — அனுவ்ருத்தி; சரீரங்கள் மற்றும் அனுபவங்கள்வ்யாவ்ருத்தி.

 

விளக்கம்:


பால்யாதிஷ்வபி ஜாக்ரதாதிஷு ததா ஸர்வாஸ்வவஸ்தாஸ்வபி

குழந்தைப்பருவம் முதலிய நிலைகளில்(பால்யாதிஷு) விழிப்பு நிலை முதலிய அனுபவங்களிலும் (ஜாக்ரதாதிஷு அபி) அவ்விதம் மற்ற அவஸ்தைகளிலும் (ததா சர்வாசு அவஸ்தாசு அபி)


வ்யாவ்றுத்தா ஸ்வனு வர்தமான மஹமித்யம்தஸ்புரம்தம் ஸதா |

வந்துசெல்லும் இவைகள் (வ்யாவ்ருத்தாஸு) எப்பொழுதும், எல்லா நிலைகளிலும் தொடர்ந்து இருப்பது(சதா அனுவர்த்தமானம்) மனதிற்குள்ளேயே ஒளிர்கின்ற, விளங்கிக்கொண்டிருக்கின்ற(அந்த ஸ்புரந்தம்) ‘நான்என்பதுதான்(அஹம் இதி)


* பால்ய ஆதிஷு குழந்தைப்பருவம், இளமைப் பருவம், வயோதிகம்இவைகள் வந்துசெல்வதால் வ்யாவ்ருத்தி; ‘நான்இவை மூன்றிலும் தொடர்ந்து இருப்பதால்(அனுவ்ருத்தி) நான் வேறு; இந்த நிலைகளை அனுபவித்த போக்தா வேறு. நான் ஆத்மா


* ஜாக்ரத் ஆதிஷுஜாக்ரத், ஸ்வப்னம், சுசுப்தி.

* சர்வாசு அவஸ்தாசுநோயை உடையவனாக இருத்த நிலை (ரோக அவஸ்தா), ஆரோக்கியத்தை உடையவனாக இருத்த நிலை, செல்வமுடையவனாக இருத்தல்(தன அவஸ்தா) போன்ற விதவிதமான அனுபவங்கள்.

  இவைகளனைத்தும் வரும் போகும்(வ்யாவ்ருத்தாஸு). மேற்கூரிய மூன்றிற்கும் இது அடைமொழி; அதாவது வந்து போகிற இந்த அவஸ்தைகளில் எந்தவொன்று தொடர்ந்து இருக்கின்றதோ அந்தநான்சத்தியமானது. மற்றவை அனைத்தும் மித்யா.


ஸ்வாத்மானம் ப்ரகடீகரோதி பஜதாம் யோ முத்ரயா பத்ரயா


எந்த தக்ஷிணாமூர்த்தி(:) [தன்னை] நாடியவர்களுக்கு/தேடியவர்களுக்கு(பஜதாம்) ஆத்ம தத்துவத்தை(ஸ்வாத்மானம்) மங்களமான(பத்ரயா) [சின்] முத்திரையினால்(முத்ரயா விளக்குகின்றாரோ (பிரகடீகரோதி). 


தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்திக்கு எனது நமஸ்காரம் இருக்கட்டும்.


ஜீவசொரூபமான எந்தவொரு ஸத்-சித்-ஆனந்த-சொரூபம் அனுவ்ருத்தமாக தொடர்ந்து இருந்ததோ அதுவே ஈஷ்வரனாகிய தன்னுடைய சொரூபமாக இருப்பதாக தெளிவாக விளக்குகிறார்

பஜதாம் - அதிகாரத்துவத்தை குறிக்கின்றது. வைராக்கியம் முமுக்ஷுத்வம் முதலிய தகுதியுடையவர்களுக்கே இந்த ஞானம் பொருள்படும்

————————————————————————————————————————————————————————


சுலோகம்:8

விஸ்வம் பஸ்யதி கார்ய காரண தயா ஸ்வஸ்வாமி சம்பந்தத:

சிஷ்யாசார்யதயா ததைவ பித்ருபுத்ரா த்யாத்மனா பேதத: |

ஸ்வப்னே ஜாக்ரதிவா ஏஷ புருஷோ மாயா பரிப்ராமித:

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ||


विश्वं पश्यति कार्यकारणतया स्वस्वामिसम्बन्धतः

शिष्याचार्यतया तथैव पितृपुत्राद्यात्मना भेदतः 

स्वप्ने जाग्रति वा  एष पुरुषो मायापरिभ्रामितः

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ८॥


எந்த இந்த புருஷனானவர் மாயையினால் மோகத்தை அடைந்தவராக கனவு நிலையிலும், விழிப்பு நிலையிலும் கார்ய காரண சம்பந்தம் உடையதாகவும், உடைமை யஜமானன் என்ற சம்பந்தம் உடையதாகவும், சிஷ்யன் ஆசார்யன் என்ற சம்பந்தத்தை உடையதாகவும் அவ்விதமே தந்தை மகன் முதலிய ரூபமாகவும் உலகத்தை வேற்றுமையுடன் பார்க்கிறாரோ அந்த குருவான ஶ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு (என்னுடைய) இந்த நமஸ்காரம் (சமர்ப்பிக்கப்படுகிறது).


=> முகவுரை:

இந்த சுலோகத்தில் ஆசிரியர்ஜகத் மித்யாஎன காட்டுகிறார். பொதுவாக நமது துயரம் ஒன்றின் மீதுள்ள சம்பந்தத்தினால் உண்டாகிறது. ஆகவே துயத்திரத்திலிருந்து விடுதலைப் பெறவேண்டுமெனில் அதன் மீதான சம்பந்தத்தை விசாரம் செய்வது அவசியமாகிறது. உலகம் நமக்கு துன்பத்தை தருவதால், அதை விசாரம் செய்து அதன் சொரூபத்தையும் சம்பந்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவேஜகத் மித்யாஎனும் ஞானம், ‘ப்ரம்ம சத்யம்எனும் ஞானத்தை போலவே மிக முக்கியமான ஒன்று

ஜகன் மித்யா எனில் ஈஷ்வரனும் சாஸ்திரமும் மித்யாவா எனும் கேள்விக்கு, ‘ஆம், ஈஷ்வரனும் சாஸ்திரமும் மித்யாஎன பதிலளிக்கும் போது பின்வரும் கேள்வி எழுகிறது. அதாவது, கானல்நீர் எவ்விதம் உண்மையான தாகத்தை தணிக்க முடியாதோ அதேபோல மித்யாவான சாஸ்திரம் எப்படி மோக்ஷத்தை அளிக்கும்? இந்த கேள்விக்கு இரு விதமாக பதிலளிக்கலாம்.

(1) ஒரு பொருள் மித்யாவாக இருந்தாலும் அது சத்தியமான ஒன்றை காட்டிக்கொடுக்க பயன்படும். உதாரணமாக, கனவில் ஒரு புலி நம்மை கடிக்க வருவதாக அனுபவிக்கும்போது பயத்தில் விழித்துக் கொள்கிறோம். சத்தியமான இந்த விழிப்பு நிலைக்கு வரக் காரணம், கனவில் நாம் பார்த்த பொய்யான(மித்யாவான) புலி. எனில், மித்யாவான சாஸ்திரம் சத்தியமான மோக்ஷத்தை ஏன் கொடுக்கமுடியாது! ஆகவே சாஸ்திரம் மித்யா தான், சம்பந்தம் மித்யா தான்; என்றாலும் இது சத்தியமான ஞானத்தைக் கொடுக்கிறது.

(2) மோக்ஷத்தையும் சத்தியம் என கூறிவிட முடியாது. மோக்ஷமும் மித்யா தான். ஏனெனில் ஜகத் மித்யா எனில் பந்தமும் மித்யா. ஆகவே பொய்யான பந்தத்திலிருந்து கிடைக்கும் மோக்ஷமும் மித்யாவே


விளக்கம்:

விஸ்வம் பஸ்யதி கார்ய காரண தயா  ஸ்வஸ்வாமி சம்பந்தத:

சிஷ்யாசார்யதயா ததைவ பித்ருபுத்ரா த்யாத்மனா பேதத:

ஸ்வப்னே ஜாக்ரதிவா ஏஷ புருஷோ மாயா பரிப்ராமித:


காரிய காரண ரூபமாக(கார்ய காரண தயா), செல்வம் மற்றும் பொருள்கள்(ஸ்வ) அந்த பொருளுக்கு தலைவன், அப்பொருளையுடையவன்[பொருள்-அதன் எஜமானன்] என்ற சம்பந்தத்துடனும்(ஸ்வாமி சம்பந்தத:) சிஷ்யன்-ஆச்சார்யன் என்ற சம்பந்தத்துடனும் (சிஷ்யாசார்யதயா) அப்படியே(ததைவ) தந்தை-மகன் சம்பந்தமாக (பித்ருபுத்ரா தயா) அந்தந்த தன்மையுடன் விதவிதமான பேதத்தில்( ஆத்மனா பேதத:) உலகத்தை(விஸ்வம்) கனவிலும் விழிப்பிலும் (ஸ்வப்னே ஜாக்ரதிவா) மாயையின் மறைக்கின்ற சக்தியினால்(மாயா) முழுமையாக மோஹத்துக்கு உட்பட்டவராக (பரிப்ராமித:).

ஈஷ்வரனாக இருக்கின்ற எந்த(:) இந்த ஜீவன்(ஏஷ புருஷ:) பார்க்கின்றாரோ (பஸ்யதி).

அவரே ஞானத்திற்கு பிறகு முக்த புருஷனான தக்ஷிணாமூர்த்தியாக அமர்ந்துள்ளார்.

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்திக்கு எனது நமஸ்காரம் இருக்கட்டும்.


* கார்ய காரண தயாஏதோ ஒரு பொருள் இருப்பதாகவும், ஒன்றிலிருந்து இனியொன்று வந்ததைப் போலவும் பார்க்கின்றான். .கா., விதை-மரம்-மரக்கட்டை-நாற்காலி.


முன் சுலோகத்தில், ஒரு பொருளின் இருப்பானது ஞானம், அறிதல் எனும் ப்ரமாணத்தினால் நிகழ்கிறது எனப் பார்த்தோம். இங்கு இனியொரு நியாயத்தை பார்க்கிறோம். அது

லக்ஷண ப்ரமாணாப்யாம் வஸ்து சித்தி:ஒரு பொருளினுடைய இருப்பு அதன் இலக்கணம் அல்லது லக்ஷணத்தினால் காட்டப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வேந்தாந்த கயிறு-பாம்பை எடுத்துக் கொண்டால் கயிற்றில் தெரியும் பாம்பிற்கு எந்த லக்ஷணமும் கொடுக்கமுடியாது. இருக்கிறது எனவும் சொல்ல முடியாது; ஏனெனில் ஞானம் வந்தவுடன் அங்கு பாம்பு இல்லை. சரி இல்லை என லக்ஷணம் கூறலாமே என்றால், அப்படியும் சொல்லிவிட முடியாது; ஏனெனில் பயத்தை நாம் அனுபவித்தோம். ஆகவே இவ்விதம் ஒரு குறிப்பிட்ட லக்ஷணத்தை கொடுக்கமுடியாத ஒன்று மித்யா; உண்மையில் அது வெறும் தோற்றமே

இந்த நியாயத்தின்படி, இந்த உலகத்தில் எதையுமே இது இப்படித்தான் என லக்ஷணம் கொடுத்துவிட முடியாது; அனைத்து ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டுள்ளது. உதாரணமாக இவர் தந்தை என ஒருவருக்கு லக்ஷணம் கூறிவிட முடியாது; ஏனெனில் அவர் இனியொரு கோணத்தில் மகனாகவும், மற்றொரு கோணத்தில் கணவனாகவும் உள்ளார். இவ்விதத்தில் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால், இந்த பிரபஞ்சம் மித்யா

 

இந்த முதல் எட்டு சுலோகத்தில் ஜீவ-ஈஷ்வர ஐக்கிய ஞானம் சொல்லப்பட்டது. தக்ஷிணாமூர்த்தியே ஜீவனாக காட்டப்பட்டு, ஞானத்தினால் ஈஷ்வரனாக அமர்ந்தார் என கூறப்பட்டது. மேலும் ஜகத் மித்யா, வெறும் தோற்றம் என கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், மனத் தூய்மையும் இல்லாத ஒருவனால் இதை புரிந்துகொள்ளவோ, ஏற்றுக் கொள்ள்வோ முடியாத ஒன்றாக இருக்கலாம். அவர்களுக்காக அடுத்த சுலோகத்தை ஆசிரியர் எடுத்தாள்கிறார்


உலகம், ஜீவன் மற்றும் ஈஷ்வரன் மித்யா என சொல்லும்போது, அதை எப்படி புரிந்துகொள்வது? ஈஷ்வரனை மித்யா என எப்படி பார்ப்பது? ஈஷ்வரன் இவ்வுலகிற்கு காரணமானவர்; இவ்வுலகை நியதிகளின் மூலம் ஆள்பவர். இப்போது இவ்வுலகம் மித்யா என சொல்லும்போது அதில் ஈஷ்வரனிடமுள்ள, ‘ஈஷ்வரன் எனும் தன்மைபொய்யாகிவிடுகிறது. ஆனால் ஈஷ்வரனின் உண்மையான சொரூபமான ப்ரம்ம சொரூபம் மித்யாவாக ஆகாது. ஆகவே ஈஷ்வரனை மித்யா என கூறும்போது அவரிடமுள்ள ஈஷ்வரன் எனும் தன்மை மித்யா. அதேபோல ஜீவனிடமும், ‘ஜீவன் எனும் தன்மைமித்யா; ஜீவனுடைய உண்மையான ஆத்ம சொரூபமோ, ஈஷ்வரனின் உண்மையான ப்ரம்ம சொரூபமோ மித்யா என கூறப்படவில்லை. மித்யா என்றாலே தோன்றிக் கொண்டிருப்பது மித்யா, அதற்கு ஆதாரமாக உள்ளது சத்தியமானது. அது ப்ரம்ம அல்லது ஆத்ம தத்துவம்

————————————————————————————————————————————————————————


சுலோகம்:9

பூரம்பாம்ச்யநலோ நிலோம்பரமஹர்நாதோ ஹிமாம்சு புமான்

இத்யாபாதி சராச்சராத்மகமிதம் யச்யைவ மூர்த்யஷ்டகம் |

நான்யத்கிஞ்சன வித்யதே விம்ருசதாம் யஸ்மாத் பரஸ்மாத்விபோ:

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ||


भूरम्भांस्यनलोऽनिलोऽम्बरमहर्नाथो हिमांशु पुमान्

इत्याभाति चराचरात्मकमिदं यस्यैव मूर्त्यष्टकम् ।

नान्यत् किञ्चन विद्यते विमृशतां यस्मात्परस्माद्विभोः

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ९॥

 

அசைகின்ற அசையாத தன்மையுடைய இந்த உலகம் பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாசம், சூரியன், சந்திரன், யஜமானன் என்று எந்த இறைவனுக்கு இவை மட்டும் உடலாக விளங்கி வருகிறதோ, உண்மையில் ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு எந்த வியாபகமான பரம்பொருளைக் காட்டிலும் வேறு ஒன்றும் இல்லையோ அந்த குருவான ஶ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு (என்னுடைய) இந்த நமஸ்காரம் (சமர்ப்பிக்கப்படுகிறது).


=> முகவுரை:

ஞானயோகத்திற்கு தகுதியில்லாதவர்களுக்கு, அதாவதுப்ரம்ம சத்யம்ஜகன் மித்யாஎன்பதை கிரஹிக்க முடியாதவர்களுக்கு இங்கு ஆசிரியர் உபாயம் கொடுக்கிறார். ப்ரம்ம சத்யம் என ஏற்றுக் கொள்வது சிறிது எளிமையானதாக இருந்தாலும், ஜகத் மித்யா என புரிந்துகொள்வதும் ஏற்றுக் கொள்வதும் பலருக்கு மிகக் கடினம். பஞ்ச பூதங்கள், எத்தனையோ நியதிகள், காரிய-காரண சம்பந்தங்கள் என முழுமையாக அனுபவித்துக் கொண்டிருக்கும், திடமாக கண்முன் தோன்றிக் கொண்டிருக்கும் இவ்வுலகை எப்படி பொய் என ஏற்றுக் கொள்ள முடியும் என்பது அவர்களின் கேள்வியாக இருக்கும். உபநிஷத் கூறும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாததற்கு காரணம் நம்முடைய விருப்பு-வெறுப்புகள். மனத்தூய்மை, அதாவது விருப்பு-வெறுப்பில்லாமல் இருத்தல் மற்றும் வைராக்கியத்தை அடித்தளமாகக் கொண்ட மனமுதிர்ச்சி இங்கு முக்கியமான தகுதி. வெறுப்பதற்கு ஆள் இல்லாதளவு வெறுப்பு நம்மை விட்டு நீங்கனால், இந்த ஜகத் மித்யா என்பது நம் மனதில் ஸ்புரிக்கும்.  

ஆகவே இவ்வுலகை பொய் என நீக்க முடியவில்லையெனில் இவ்வுலகை ஈஷ்வரனாக பார்; பார்ப்பவை அனைத்தும் இறை சொரூபமாக பார், என ஆசிரியர் உபாயத்தை கூறுகிறார். இதனால் மனம் தூய்மையாகும். மனம் தூய்மை ஆக ஆக வேதாந்த வாக்கியம் நமக்கு புரிய ஆரம்பிக்கும்


விளக்கம்:


பூரம்பாம்ச்யநலோ நிலோம்பரமஹர்நாதோ ஹிமாம்சு புமான்

இத்யாபாதி சராச்சராத்மகமிதம் யச்யைவ மூர்த்யஷ்டகம்


பூமி(பூ:) தண்ணீர்(அம்பாம்சி) நெருப்பு(அநல:) காற்று(அநில:) ஆகாசம்(அம்பரம்) சூரியன்/பகலுக்கு தலைவன் (அஹர் நாத:) சந்திரன் (ஹிமாம்சு:), ஜீவராசிகள்(புமான்) என(இதி) இந்த நகர்கின்ற நகராத தன்மையையுடைய/ சேதன அசேதன ரூபமாக(இதம் சரம் அசரம் ஆத்மகம்) விளங்கிக்கொண்டுள்ள(ஆபாதி)

 எந்த இறைவனுக்கு இந்த எட்டும் உடலாக இருக்கின்றதோ(யஸ்ய ஏவ மூர்த்தி: அஷ்டகம்)


* முதல் ஏழு சொற்களிலிருந்து இந்த ஜட பிரபஞ்சம் அனைத்தும், பதினான்கு லோகங்களும், அதில் வாழும் அனைத்து உயிர்களும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.

* ‘அனைத்தும் ஈஷ்வரன்என்ற இக்கருத்தை ஒரு வேதாந்தியான நாம் எந்த அளவு ஏற்றுக் கொள்கிறோம் என்பது முக்கியம். நாம் இதை உபாசனைக்காகவும் மனத்தூய்மைக்காகவும் பேசப்படுவதாக ஏற்றுக் கொள்கிறோம். நம் மனதிலுள்ள விருப்பு-வெறுப்புகள் நீங்க உலகையே ஈஷ்வரனின் உடலாக பார்க்கிறோம். ஆனால் இதுவே முடிவான தத்துவம் கிடையாது



நான்யத்கிஞ்சன வித்யதே விம்ருசதாம் யஸ்மாத்  பரஸ்மாத்விபோ:


ஞானயோகத்தினால் விசாரம் செய்து பார்ப்பவர்களுக்கு(விம்ருசதாம்) எந்த மேலான ப்ரம்ம/எங்கும் வியாபித்துள்ள ப்ரம்மத்தைக் காட்டிலும்(யஸ்மாத் பரச்மாத் விபோ:) வேறான ஒன்றுமே கிடையாதோ( அந்யத் கிஞ்சத்)


தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்திக்கு எனது நமஸ்காரம் இருக்கட்டும்.


ஆகவே இந்த சுலோகத்தில் ஆசிரியர் இரண்டு திருஷ்டியைக் கொடுக்கிறார்.(1) அத்வைத திருஷ்டி - ‘ஜகத் மித்யா; ப்ரம்ம சத்யம்’; உலகம் என்ற ஒன்று கிடையாது; இருப்பது ப்ரம்ம ஒன்று தான். ஒருகால் ஜகத் கல்பிதம் என ஏற்றுக் கொள்ள முடியவில்லையெனில் ஜகத் சிருஷ்டம் என ஏற்றுக் கொண்டு இரண்டாவது திருஷ்டிக்கு செல்கிறோம்

(2) பார்ப்பதெல்லாம் இறைவனின் சொரூபம். இறைவன் காரணம்; உலகம் காரியம். காரணத்திலிருந்து காரியம் வேறாக இல்லாத காரணத்தினால் அனைத்தும் ஈஷ்வரன்

————————————————————————————————————————————————————————


சுலோகம்: 10

ஸர்வாத்மத்வமிதி ஸ்புடீக்றுதமிதம் யஸ்மாதமுஷ்மின் ஸ்தவே

தேனாஸ்வ ஶ்ரவணாத்ததர்த மனனாத்த்யானாச்ச ஸம்கீர்தனாத் |

ஸர்வாத்மத்வமஹாவிபூதி ஸஹிதம் ஸ்யாதீஶ்வரத்வம் ஸ்வத:

ஸித்த்யேத்தத்புனரஷ்டதா பரிணதம் சைஶ்வர்ய மவ்யாஹதம் ||



सर्वात्मत्वमिति स्फुटीकृतमिदं यस्मादमुष्मिन् स्तवे

तेनास्य श्रवणात्तदर्थमननाद्ध्यानाच्च संकीर्तनात् 

सर्वात्मत्वमहाविभूतिसहितं स्यादीश्वरत्वं स्वतः

सिद्ध्येत्तत्पुनरष्टधा परिणतं चैश्वर्यमव्याहतम् १०॥


இவ்விதம் இந்த ஸ்தோத்திரத்தில் யாதொரு காரணத்தால் இந்த எல்லாமாக இருக்கும் தன்மை( = ஸர்வாத்மத்வம்) நன்கு விளக்கப்பட்டுள்ளதோ, அதனால் இதை கேட்பதனாலும், இதிலுள்ள பொருளை சிந்திப்பதாலும், தியானிப்பதாலும், திரும்பத்திரும்பக் கூறுவதாலும் எல்லாமாக இருத்தல் என்ற உயர்ந்த மேன்மையுடன் கூடிய ஈஷ்வரத்தன்மை ஏற்படும். மேலும் எட்டுவிதமான அந்த அணிமா முதலிய ஐசுவர்யமும் தடையில்லாமல் தானாகவே கிடைக்கும்.


=> முகவுரை:

இந்த தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம், தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் என்றும் அழைக்கப்படும். அஷ்டகம் என்றால் எட்டு பகுதியை(சுலோகத்தை) உடையது என்பது பொருள். முதல் எட்டு சுலோகத்தில்தான் ஜீவ-ப்ரம்ம ஐக்கிய ஞானத்தை பற்றிப் பேசுவதால் அவ்விதம் சொல்வதாகக் கூறப்படுகிறது

இந்த ஸ்தோத்திரத்தை படிப்பதாலும், புரிந்துகொள்வதினாலும் கிடைக்கும் பிரயோஜனத்தை பற்றி இந்த சுலோகத்தில் ஆசிரியர் கூறுகிறார்.


விளக்கம்:


ஸர்வாத்மத்வமிதி ஸ்புடீக்றுதமிதம் யஸ்மாதமுஷ்மின் ஸ்தவே


யாது காரணத்தினால்(யஸ்மாத்) இந்த ஸ்தோத்திரத்தில்(அமுஷ்மின் ச்தவே) அனைத்தும் ஆத்மா எனும் தத்துவம்(சர்வாத்மத்வம்) இங்கு தெளிவாக விளக்கப்பட்டதோ(இதம் ச்புடீக்ருதம்)


* சர்வாத்மத்வம் - எனில் அனைத்தும் ஆத்மாவாக, நானாக இருத்தல்; அனைத்தும் ப்ரம்மனாக இருத்தல்; அனைத்தும் ஈஷ்வரனாக இருத்தல்.

தேனாஸ்வ ஶ்ரவணாத்ததர்த மனனாத்த்யானாச்ச ஸம்கீர்தனாத் |


அந்த காரணத்தினால்(தேந) இந்த ஸ்தோத்திரத்தை(அஸ்ய) கேட்டல், அர்த்தத்தை புரிந்து கொள்ளுதல்(ஸ்ரவணாத்) சிந்தித்து சந்தேகம் தெளிதல்(ததர்த்த மனநாத்) நிதித்யாசனம் செய்து(த்யானாத்) மற்றவர்களுக்கு இதை உபதேசம் செய்வதாலும்கூட(சங்கீர்த்தநாத்


*சங்கீர்த்தநாத் - இதை புரிந்து, புரிந்தபடி வாழ்க்கையை வாழ்வதே மற்றவர்களுக்கு இதன் மஹிமையை நாம் காட்டிக் கொடுப்பதாகிறது. இவ்விதத்தில் மக்களுக்கு நன்மையைச் செய்யலாம்.


ஸர்வாத்மத்வமஹாவிபூதி ஸஹிதம் ஸ்யாதீஶ்வரத்வம் ஸ்வத:


மிகப் பெரிய பெருமையை உடைய/ மிக உயர்ந்ததான(மஹா விபூதி ஸஹிதம்) சர்வாத்மத்துவத்தை(சர்வாத்மத்வம்) சுபாவமாகவே, எந்த விதமான உதவியுமின்றி இயற்கையாகவே(ஸ்வத:) அவனே ஈஷ்வரனாக ஆகின்றான், ஈஷ்வரத்துவத்தை அடைகின்றான்(ஈஸ்வரத்வம் ஸ்யாத்)



* சர்வாத்மத்துவத்தை புரிந்து கொள்வதால் கிடைக்கும் பலன் சர்வாத்மத்துவமே. வேதாந்தத்தில் மட்டும்தான் இவ்விதம் நடக்கும்; அறியப்படும் விஷயமே பிரயோஜனமாகிறது. ப்ரம்மத்தை புரிந்துகொள்ளும் ஒருவன் ப்ரம்மனாகவே ஆகிறான்ப்ரம்ம வேத ப்ரம்மைவ பவதி


எந்தவொரு காரியத்திலும் முக்கிய பலனும், அவாந்தர பலனும்(அமுக்கிய பலன்) கிடைக்கும். உதாரணமாக தேங்காயிலிருந்து எண்ணை எடுக்கப்படும்போது கிடைக்கும் முக்கியப் பலன் தேங்காய் எண்ணை. அவாந்தரப் பலன், அதனுடைய சக்கையாகிய புண்ணாக்கு. எண்ணைக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுமே தவிர புண்ணாக்கு வேண்டுமென்பதற்காக யாரும் அக்காரியத்தில் ஈடுபடுவதில்லை. அவ்விதம் இந்த ஸ்தோத்திரத்தினால் கிடைக்கும் அவாந்தப் பலனாக அஷ்டமஹா சித்தியை, நான்காவது வரியில் ஆசிரியர் கூறுகிறார். ஆகவே ஒருவனின் முக்கியத்துவம் மோக்ஷத்தில் இருக்கவேண்டுமே தவிர, சித்தி என்பதெல்லாம் அமுக்கியமானது.

விசாரத்திற்கு முன் மனதை ஒருமுகப்படுத்தும் சாதனையின்போதும், உபாசனையின் பலனாகவும் மஹான்களுக்கு இப்படிப்பட்ட சித்துக்கள் வரலாம். ஆனால் அவர்கள் அதற்காக இச்சாதனையில் ஈடுபடவில்லை. ஒருகால் இந்த சித்துக்களினாலும்கூட அவர்களின் கவனம் சிதறடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் விசாரத்திற்கு வந்தபின், வைராக்கியத்தின் முக்கியதுவத்தை அறிந்தபின், இவர்களுக்கு தங்களது சித்துக்களின் மீதே வைராக்கியம் ஏற்பட்டுவிடுகிறது. அப்போது அவர்களிடம் சித்துக்கள் இருந்தும் அதை அவர்கள் பயன்படுத்தவோ, முக்கியத்துவம் கொடுக்கவோ மாட்டார்கள். சில மஹான்களின் வாழ்க்கையில் சித்துக்கள் இருந்ததாகப் படிக்கிறோம். அதை நாம் இவ்விதத்தில் புரிந்து கொள்ளலாம். சித்தியில் வைராக்கியம் இருப்பவர்களுக்கே இந்த ஞானம் சாத்தியமாகும் என்பதை இவ்விடத்தில் தெளிவாக புரிந்துகொள்வது அவசியம்.  


ஸித்த்யேத்தத்புனரஷ்டதா பரிணதம் சைஶ்வர்ய மவ்யாஹதம் ||


எட்டுவிதமாக இருக்கின்ற சித்திகள்/அஷ்டமஹா சித்தி(அஷ்டதா பரிணதம் சைஸ்வர்யம்) தடையின்றி கிடைக்கும்(அவ்யாஹதம் சித்தயே)


=> அஷ்டமஹா சித்திகள்:

அனிமா மஹிமா சைவ கரிமா லகிமா ததா

ப்ராப்தி ப்ராகம்யமீஷித்துவம் வசித்வம் சாஷ்டசித்தய:

1. அனிமாமிகச் சிறியதாக தன்னை மாற்றிக் கொள்ளுதல்

2. மஹிமா - மிகப் பெரியதாக தன்னை மாற்றிக் கொள்ளுதல்

3. கரிமா - மிகப் பளுவாக மாறுதல்

4. லகிமா - மிக லேசாக மாறுதல்

5. ப்ராப்தி - ஓரிடத்திலிருந்து இனியோரிடத்திற்கு பயணிக்காமல் செல்லுதல் 

6. ப்ராகம்யம் - விரும்புவதை அடைதல்

7. ஈஷித்வம் - ஆள்தல்

8. வசித்வம் - மற்றவர்களை வசீகரித்தல்; மயக்குதல்.

————————————————————————————————————————————————————————