Tuesday, February 8, 2022

தியான சுலோக விளக்கம்

ஶ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் முகவுரை:

ஸ்தோத்ரம் = பாமாலை

ஸ்துதி: = ஸ்தூயதே அநேந இதி ஸ்தோத்ரம் = எதனால் புகழ்ச்சி செய்யப்படுகிறதோ அல்லது வணங்கப்படுகிறதோ அது ஸ்தோத்ரம். சொற்களால் வணங்குவது; செய்யுள்களால் பாமாலை தொடுப்பது

வேதத்தில் இறைவனை புகழ்தல் சூக்தம் என்றழைக்கப்படும். .கா., புருஷ சூக்தம், விஷ்ணு சூக்தம். மற்ற இடங்களில் இவ்விதம் செய்யப்பட்டால் அது ஸ்தோத்ரம்


=> ஸ்தோத்ரத்தின் பங்கு:


ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவும் பக்தியெனும் சாதனைக்கு முக்கியமாக தேவைப்படுவது ஸ்தோத்ரம்; இது பக்தியின் அங்கம். வாக் இந்திரியத்தை பிரதானமாகக் கொண்டது. உபாசனம் எனும் சாதனைக்கும் ஸ்தோத்ரம் முக்கிய பங்கு வகிக்கிறது. மன ஒருமுகப்பாட்டிற்கு உதவுவது.


பொதுவாக ஸ்தோத்ரங்களின் இறைவனை வர்ணிப்பவைகளாக இருப்பதால் அவைகள் விசாரத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவது கிடையாதுஅது முழுக்க முழுக்க பக்தி செலுத்தலுக்காகவும், மன ஒருமுகப்பட்டிற்கும் உபயோகப்படுத்துவது வழக்கம். இதில் புகழப்படும் தெய்வத்தை குறித்து இரு பார்வைகள் வைக்கப்படும். ஒன்று அனைத்தும் உனது. இரண்டாவது அனைத்துமாகவும் நீயே உள்ளாய் என்பது ஸ்தோத்ரத்தின் மையக்கருத்து. இது ஓரளவுக்கு நம் மனதை தூய்மைபடுத்த உதவும். இவ்வகை பக்தியின் பலன்

1. நல்ல குணங்கள் வந்து சேரும் 

2. கெட்ட குணங்கள் வராது.

=> ஸ்தோத்ரத்தின் பலன்:

பக்தி, மன ஒருமுகப்பாடு, பாராயணம், தியானத்தில் மானச பாராயணம் 


தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்:

  இது மற்ற ஸ்தோத்ரங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. மற்றவைகளில் கிடைக்கும் பலனும் உண்டு. இது இனியொரு பணியையும் செய்கிறது. இது வெறும் பாராயண ஸ்தோத்ரமாக மட்டுமில்லாமல் வேதாந்த கிரந்தமாகவும் செயல்படுகிறது. வேதாந்ததின் சாரம் இதில் உள்ளதால் இது விசாரத்திற்கும் பயன்படுகிறது. ஆகவே இது சிரவணம் என்ற சாதனைக்கு உட்பட்டது. மேலும் அர்த்தம் தெரிந்து பாராயணம் செய்யும் போது இது நிதித்யாசனமாகவும் மாறுகிறது


=> தக்ஷிணாமூர்த்தி:

தக்ஷிணாமூர்த்தி சிவனின் அம்சம் அல்லது சிவனின் வெளிப்பாடு

உலகைப் படைத்த பிரம்மதேவர், முதன்முதலில் தனது மனதிலிருந்தே சனகர் முதலிய நான்கு பேரை சிருஷ்டி செய்தார். அவர்களுக்கு வேதத்தை பற்றிய முழு அறிவையும் கொடுத்தார். வேத அறிவை அடைந்த முனிவர்கள், இவ்வுலகை குறித்து முழு வைராக்கியத்தை கொண்டிருந்ததால் நிவ்ருத்தி மார்க்கம் என கூறப்படும் சந்யாச வாழ்க்கையை மேற்கொண்டனர். அனைத்து ஞானமும் இருந்தும் இவர்களின் மனம் நிறைவற்றதாகவே இருந்தது. காரணம், உடல் நிலையற்றது; உலகம் நிலையற்றது என தெரிந்துவிட்டது. எது நிலையானது, ‘நான்எனும் அபிமானத்தை எதில் வைக்கவேண்டும் என்று தெரியவில்லை. பாதி கிணறு மட்டும் தாண்டியவர்களாக தனது தந்தையான பிரம்மதேவரிடம் சென்று, ‘எங்களுக்கு எங்களை பற்றிய ஞானத்தை கொடுங்கள்; ஆத்ம ஞானத்தை அளியுங்கள்என்று கேட்டனர். தந்தை எனும் உறவினால் ஞானத்தை அடைய உதவும் சிரத்தை தடைப்படலாம் என பிரம்மதேவர் இவர்களை சிவனிடம் அனுப்பி இவர்களின் குழப்பத்திற்கு தீர்வு காணுமாறு பணித்தார். ‘நான்எனும் சொல்லை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென்ற கேள்விக்கான ஆத்ம ஞானத்தை போதிக்கும் ஒரே நோக்கத்துடன் சிவபெருமான் தக்ஷிணாமூர்த்தி உருவம் எடுத்து ஆல மரத்தடியில் அமர்ந்தார். இவர்களுக்கு ஆத்ம வித்யையை வழங்கினார். ஆகவே தக்ஷிணாமூர்த்தி ஆத்ம வித்யைக்கான அதிஷ்டான தேவதை. செல்வத்திற்கு லட்சுமி, வீரத்திற்கு துர்கா என ஒவ்வொரு விஷயத்திற்கும் ஈஷ்வரனின் வெளிப்பாடாக ஒரு அதிஷ்டான தேவதை உண்டு. அவ்விதத்தில் ஆத்ம ஞானத்திற்கான ஈஷ்வரனின் வெளிப்பாடு தக்ஷிணாமூர்த்தி.       


=> தக்ஷிணாமூர்த்தி என்ற சொல்லின் பொருள்:

தக்ஷிணா + மூர்த்தி

தக்ஷிணா என்பதற்கு நான்கு அர்த்தங்கள் உள்ளது

    1. தெற்கு திசை  

    2. சாமர்த்தியமானவன்(நிபுண:, capable)  

    3. வலது பக்கம்  

    4. தக்ஷிணை(காணிக்கை). 

        இதில் முதல் இரண்டு பொருள் மட்டும் இங்கு பொருந்தி வரும்மூர்த்தி = உருவம்/விக்கிரஹம்.

 

1. தக்ஷிணாமூர்த்தி = தக்ஷிண திக் அபி4முகா மூர்த்தியஸ்ய : சிவ:  = எந்த விக்கிரஹமானது தெற்கு திசையை நோக்கி அமர்ந்துள்ளதோ, அந்த தேவன் தக்ஷிணாமூர்த்தி = எல்லா இடத்திலுமுள்ள சிவபெருமான், தெற்கு திசையை நோக்கி அமர்ந்தவராக உடலை எடுத்துள்ளார்.

ஏன் தெற்கு? யமதர்ம ராஜா இருக்கும் திசை தெற்கு. ஆகவே தக்ஷிணாமூர்த்தி யமனை நோக்கி எதிர்த்து அமர்ந்துள்ளார். உடல் தாங்கிக்கொண்டிருக்கும் மனிதர்கள் பொதுவாக மரண பயத்தினால் கட்டுண்டு யமனிருக்கும் திசை நோக்க அஞ்சுவர். தக்ஷிணாமூர்த்தி உடலோடு இருந்தபோதிலும்நான் பரப்ரம்மஎன்ற ஞானத்துடன் இருந்த காரணத்தினால் மரணத்தை வென்றவராக யமனை நோக்கி அமர்ந்திருக்கின்றார்


2. தக்ஷிணாமூர்த்தி = இரண்டாவதில் தக்ஷ் என்றால் சாமர்த்தியம் என்று பொருள். அதிலிருந்து தக்ஷிண: என்ற சொல் வருகிறது. இங்கு நெடில்(தீர்க்கம்) வராது. ஆகவே தக்ஷிணமூர்த்தி என்றுதான் எடுத்து கொள்ளமுடியும். தக்ஷிணாமூர்த்தி = தக்ஷிண: + அமூர்த்தி.

தக்ஷிண: = சாமர்த்தியமானவர்; அமூர்த்தி: = உருவமற்றவர்

  இதன் தாத்பர்யம் என்னவெனில், இந்த தக்ஷிணாமூர்த்தி உண்மையில் ஈஷ்வரனாகவே இருக்கின்ற காரணத்தினால் மாயையை தன்னுடைய வசத்தில் வைத்து இந்த முழு பிரபஞ்சத்தையே சிருஷ்டி, ஸ்திதி மற்றும் லயம் செய்யும் சாமர்த்தியமுடையவர். சில சமயம் தக்ஷிணாமூர்த்தி முன்ஶ்ரீசேர்க்கும் வழக்கமுள்ளது. ஶ்ரீ என்பது மாயையை குறிக்கிறது. மாயையை தன் வசம் வைத்து இவ்வுலகை படைத்து, காத்து பிறகு தனக்குள் எடுத்துக் கொள்கிறார்- ‘ஶ்ரீ யுக்த தக்ஷிணாமூர்த்தி’. இது ஒருபுறமிருக்க, உண்மையில் அவர் எப்படிப்பட்டவர்? அமூர்த்தி: = உருவமற்றவர்; நிர்குண சொரூபமானவர். உடலற்றவர். ஆகவே இந்த இரு சொல்லும் ஈஷ்வர தத்துவத்தையும், ப்ரம்ம தத்துவத்தையும் குறிக்கிறது. ‘ஈஷ்வரனாகவும், ப்ரம்மனாகவும் யார் இருக்கின்றாரோ அவர் தக்ஷிணாமூர்த்தி’.

தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்’ - இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்தியை இந்த ஸ்தோத்ரத்தின் துணைக் கொண்டு வணங்குகிறோம்


இது சங்கரரால் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. இதில் 10 சுலோகங்கள் உள்ளன. இவைகளுக்கு ஸ்வயம் பிரகாச முனி என்பவர் சில தியான சுலோகங்கள் கூறியிருக்கிறார். முதலில் அதன் விளக்கத்தைக் காண்போம்

--------------------------------------------------------------------------------------------------------------------


தியான சுலோக விளக்கம்:


மெளனவ்வ்யாக்யா ப்ரகடித பரப்ரம்ம தத்வம் யுவாணம்

வர்ஷிச்1டாந்தே வசத் ரிஷிகணை: ப்ரம்மநிஷ்டை:

ஆசார்யேந்த்ரம் கரகலித சிந்முத்3ரமானந்த ரூபம்


ஸ்வாத்மாராமம் முதி3 வதனம் தக்ஷிணாமூர்த்திமீடே || 1 || 


தக்ஷிணாமூர்த்திம் ஈடே

தக்ஷிணாமூர்த்திம் - தக்ஷிணாமூர்த்தியை, (அஹம்)ஈடே - நான் வணங்குகிறேன்

எப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்தி?


மெளனவ்வ்யாக்யா ப்ரகடித பரப்ரம்ம தத்வம் யுவாணம்

மெளனவ்வ்யாக்யா - மெளனத்தையே உபதேசமாகக் கொண்டு; ப்ரகடித பரப்ரம்ம தத்வம் - பரப்ரம்ம தத்வம் விளக்கப்பட்டது/நிர்குண ப்ரம்மத்தின் சொரூபத்தை விளக்கினார்.


சனகாதி முனிவர்களுக்கு எதுநான்அல்ல என ஏற்கனவே தெரிந்திருந்தது. ஆனால் எதில்நான்என்ற புத்தியை வைக்கவேண்டும் என்ற ஞானமில்லாமல் இருந்தது. ஆகவே குருவாகிய தக்ஷிணாமூர்த்தி பெரிய உபதேசம் எதுவும் செய்யாமல் ஒரு முத்திரையைக் கொண்டு மெளனமாகவே அதை அம்முனிவர்களுக்கு போதித்து விட்டார். கோபப்படாதே என மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதைக்காட்டிலும் கோபப்படாமலிருப்பதே பெரிய உபதேசம்.


யுவாணம் - இளமையானவரை; இளமையான உருவத்தில் அமர்ந்தார்; கால தத்துவத்தை கடந்தவர்.


வர்ஷிச்1டாந்தே வசத் ரிஷிகணை: ப்ரம்மநிஷ்டை:


வர்ஷிச்1: - மிக மூத்தவர்கள்/வயதானவர்கள் அந்தே - குருகுலத்தில் வசத் - வசித்துக்கொண்டிருக்கின்ற ரிஷிகணை: - 4 ரிஷிகளின் கூட்டத்தினால் ஆவ்ருதம் - சுற்றி அமர்ந்துள்ளார்கள்.


எப்பொழுதுமே குருகுலத்தில் வசித்துக்கொண்டிருக்கின்ற 

மிக வயதான இந்த நான்கு சனகாதி முனிவர்களும் மிக இளமையான தக்ஷிணாமூர்த்தியை சுற்றி அமர்ந்துள்ளார்கள்.

மூன்று விதமான முதுமை:

  1. வயோ வ்ருத்34: — வயதினால் முதுமை

  2. ஆசார வ்ருத்34: — ஒழுக்கத்தினால் வயதானவன்

  3. ஞான வ்ருத்34: — ஞானத்தினால் வயதானவன்; ஞானத்தினால் கிடைத்த பக்குவத்தின் காரணமாக அனைத்து பொறுப்புகளையும் உதறியவன்.

நான்கு சனகாதி முனிவர்களும் மேற்கூரிய மூன்று விதத்திலும் முதுமையை, மேலான நிலையை அடைந்தவர்கள். ஆசாரத்தினாலும் ஞானத்தினாலும் மன வளர்ச்சியை அடைந்தவர்கள். இவர்கள் எப்படித் தங்களது காலத்தை கழித்துக் கொண்டிருந்தார்கள்?


ப்ரம்மநிஷ்டை: - சகுணப்ரம்மத்தை உபாசனை செய்து கொண்டிருந்தார்கள். ஜபோநிஷ்ட: - ஜபத்தில் மனதில் வைத்தவர்கள்.


முதிய பருவத்தில் ஜபம் எனும் சாதனையில் சுகத்தை பழகிக்கொண்டால், வியவஹாரத்திலிருந்து விலகி பின்னர் மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் மேலான முறையில் நமது காலத்தை கழிக்க, நம்மிடத்தியேலே இருக்க இப்பயிற்சி உதவும்.


ஆசார்யேந்த்ரம் கரகலித சிந்முத்3ரமானந்த ரூபம்


ஆசார்யேந்த்ரம் - [தக்ஷிணாமூர்த்திக்கான அடைமொழி இது; ஆசார்யாணாம் இந்தர:] - ஆசார்ய + இந்த்ரம்ஆசிரியர்களுக்குள் தலைவனாக, சிறந்தவனாக இருப்பவர்.

மற்றவர்கள் புரிந்துகொள்ளுமளவு விளக்குவதற்கு ஒரு தனி திறமை தேவை. பேசிப் புரிய வைப்பதற்கே கடினமான ஓர் அறிவை, இவர் மெளனத்தினாலேயே, ஒரு முத்திரையை காட்டி புரிய வைத்தார்.


கரகலித சிந்முத்3ரம்கையில் [வைக்கப்பட்ட] சிந் முத்திரையை ஏந்தியவரை( நான் வணங்குகின்றேன்).


இந்த உடல், மனம், உலகம் அனைத்தும் ஜடமானது; நிலையற்றது என புரிந்து கொண்ட சனகாதி முனிவர்களுக்கு ஒரு பெரிய குழப்பம் வந்தது. ‘நான்என்று நினைத்து கொண்டிருந்த இந்த உடல் மற்றும் மனம் நானல்ல எனில் எந்த இடத்தில்நான்என்ற புத்தியை வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. இப்போது தக்ஷிணாமூர்த்தி சிந் முத்திரையைக் காட்டிநான்என்ற புத்தியை பரப்ரம்மனிடத்தில் வைக்கவேண்டும் என மெளனமாகக் கூறுகிறார். சிந் முத்திரையின் நீட்டப்பட்டுள்ள மூன்று விரல்களும் நமது மூன்று சரீரங்களை(ஸ்தூல, சூக்ஷம, காரண) காட்டுகிறது. ஆள்காட்டி விரல், ஜீவாத்மா எனும் அஹங்காரத்தை குறிக்கிறது. நாம் சாதாரணமாக கையை வைத்திருக்கும் போது இந்த ஆள்காட்டி விரல் எப்போதும் மற்ற மூன்று விரல்களுடன் சேர்ந்தே இருக்கும். இது இயற்கையாகவே, இந்த ஜீவாத்மா மூன்று சரீரத்தோடு அபிமானம் வைத்திருப்பதை குறிக்கிறது. மற்ற நான்கு விரல்களும் வேலை செய்வதற்கு ஆதாரமாக இருக்கின்ற கட்டை விரல், பரமாத்மாவைக் குறிக்கிறது. இங்கும் இயற்கையாகவே எல்லா ஜீவாத்மாக்களும் பரமாத்மாவிடம்நான்என்ற அபிமானத்தை பிரித்து, மூன்றில் ஏதேனும் ஒரு சரீரத்தில்நான்எனும் புத்தியை வைத்திருக்கின்றது. ஆகவே சிந் முத்திரையின் மூலம் தக்ஷிணாமூர்த்தி, இந்த மூன்று சரீரத்திலுள்ள அபிமானத்தை நீக்கி, பரமாத்மாவிடம்நான்என்கிற புத்தியை வைக்க வேண்டும் என காட்டுகிறார். முத்திரையில் கட்டை விரலும் ஆள்காட்டிவிரலும் ஒரு வட்டத்தை தோற்றுவிக்கிறது. இது பூர்ணத்தைக் குறிக்கிறது. ஆரம்பமும் அதாவது தோற்றமும் இல்லை, முடிவும் இல்லை. அப்படிப்பட்ட நிலையை அடைகின்றான். சிந் முத்திரைக்கு வழங்கப்படும் மற்ற பெயர்கள், ஞான முத்ரா மற்றும் மெளன முத்ரா.    

ஆனந்த ரூபம் - ஆனந்தமாக; மன நிறைவுடன்; பூர்ணமாக இருக்கின்றார்.

இது சிந் முத்திரையை சரியாக புரிந்து கொள்வதன் விளைவைக் குறிக்கிறது.


ஸ்வாத்மாராமம் முதி3 வதனம் தக்ஷிணாமூர்திமீடே


ஸ்வாத்மாராமம் - தன்னிடத்திலேயே தான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார். எந்த விதமான வெளிப்பொருளுமில்லாமல் தன்னிடத்திலேயே ஆனந்தமாக இருத்தல்

முதி3 வதனம் - மகிழ்ச்சியான முகத்துடன் இருப்பவர்; ஆழ்ந்த அமைதியுடன் இருபவரது முகத்திலும் அந்த அமைதி மற்றும் மகிழ்ச்சி வெளிபடுகிறது.


 தக்ஷிணாமூர்த்திமீடே - இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்தியை நான் நமஸ்காரம் செய்கின்றேன்.


சுலோகம்:2 


வடவிடபி சமீபே பூ4மிபா4கே3 நிஷண்ணம்

சகலமுனி ஜனானாம் ஞானதா3தாரம் 

த்ரிபு4வன குருமீச1ம் தக்ஷிணாமூர்தி தே3வம்

ஜனனமரணது3:2 ச்சே23 3க்ஷம் நமாமி || 2 ||


வடவிடபி சமீபே - ஆல மரத்தின் அடியில்

பூ4மிபா4கே3 நிஷண்ணம் - பூமியின் பாகத்தில்(திட்டு போன்ற இடத்தில்) அமர்ந்திருந்தார் 

சகலமுனி ஜனானாம் ஞானதா3தாரம் - தனக்கு கீழ் அமர்ந்துள்ள அனைத்து சிஷ்யர்களுக்கும்(முனிகள்) ஞானத்தைக் கொடுப்பவர்

ஆராத் [சாக்ஷாத்] - மிக தெளிவாக நேரடியாக; உடனடியாக (ஞானத்தைக் கொடுத்தார்).

த்ரிபு4வன குரும் - மூன்று புவனங்களுக்கும் குருவாக இருப்பவரை,

இந்த ஞானத்தை வழங்கக்கூடிய அனைத்து குருவின் வடிவிலும் இருப்பவர்.

ஈச1ம் - அனைத்தையும் ஆள்பவரை,

தக்ஷிணாமூர்த்தி தே3வம் - தக்ஷிணாமூர்த்தி என்ற பெயரையுடைய தேவனை

ஜனன மரண து3:2 சே23 3க்ஷம்பிறப்பு இறப்பு எனும் துக்கத்தை நீக்கும் சாமர்த்தியவான்; நிபுணன். ஞான முத்திரை எனும் ஆயுதத்தினால் நமது துக்கத்தை நாசப்படுத்துபவர்

நமாமி - இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்தியை நான் நமஸ்காரம் செய்கின்றேன்.


சுலோகம்:3


சித்ரம் வடதரோர் மூலே வ்ருத்3தா4: சி1ஷ்யா குருர்யுவா

குரோஸ்து மெளனம் வ்யாக்யானம் சி1ஷ்யாஸ்துச்சிந்நஸம்ஸயா: || 3 ||


சித்ரம் வடதரோர் மூலே - ஆலமரத்தின் கீழ் ஓர் ஆச்சரியமான காட்சி உள்ளது.

வ்ருத்3தா4: சிஷ்யா: - சிஷ்யர்களெல்லாம் வயதானவர்கள்,

குரு: யுவா - குருவானவர் மிக இளமையானவர்

* இது ஒரு ஆச்சரியம்

குரோஸ்து மெளனம் வ்யாக்யானம் - குருவோ மெளனமாக இருக்கிறார்; மெளனமாக விளக்கத்தை அளிக்கிறார்.

சிஷ்யா: து - ஆனால் சிஷ்யர்கள் 

சிந்ந ஸம்ஸயா: - நீக்கப்பட்ட சந்தேகங்கள்

* மெளனத்திலிருந்தே சந்தேகங்கள் நீக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இது இரண்டாவது ஆச்சரியம். இங்கு குரு மற்றும் சிஷ்யர்கள், இருதரப்பினருமே பெருமைக்குரியவர்களே. ஏனெனில் மெளன விளக்கத்தை சரியாக புரிந்துகொள்ள சிஷ்யர்களும் அந்த அளவு தகுதியுடன் இருந்தனர். ஒருமுறை புத்தரிடம் சிஷ்யன் ஒருவன், ஆத்மா என்றால் என்ன? என்ற கேள்வியைக் கேட்டான். அதற்கு மெளத்தை பதிலாக அளித்தார் புத்தர். உடனே சிஷ்யன், ‘சூன்யம் தான் ஆத்மாஎன முடிவெடுத்தான். இனியொரு சிஷ்யன், வந்துபோகிற க்ஷனிகமான எண்ணங்கள் தான் ஆத்மா என முடிவுசெய்தான். இந்த மெளனம் நான்கு விதத்தில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. இதனால் புத்த மதத்தில் நான்கு பிரிவு தோன்றியது. ஆகவே குருவின் உபதேசத்தை சரியாக புரிந்துகொள்ளும் சிஷ்யர்களும் ஆச்சரியம் தான்


சுலோகம்:4


நித4யே ஸர்வவித்3யானாம் பி4ஷஜே 4 ரோகி3னாம் 


குரவே ஸர்வலோகானாம் தக்ஷிணாமூர்தயே நம : || 4 ||


ஸர்வ வித்3யானாம் நித4யே - எல்லா ஞானங்களுக்கும் பொருள் களஞ்சியமாக இருப்பவர்.


பி4ஷஜே 4 ரோகி3னாம் - சம்சாரம் என்ற நோயை உடையவர்களுக்கு வைத்தியராக இருப்பவர்.


அனைவருமே சம்சாரம் என்ற நோயினால் பீடிக்கப்பட்டவர்களாக இருந்தும், ஏன் அனைவரும் இந்த ஞானம் எனும் வைத்தியத்திற்கு வருவதில்லை. யதார்தத்தில், நோய் இருப்பதை விட, தனக்கு நோய் இருக்கிறது என கண்டுகொண்டவர்களே மருத்தவரிடம் செல்கிறார்கள். அதுவே இங்கும் நடைபெறுகிறது. தன்னை சம்சாரியாக உணர்ந்து கொண்டவன் அதிகாரிதுவத்தை அடைகிறான். ஞானத்தை தேடிச் செல்கிறான். முமுக்ஷு ஆகிறான்

குரவே ஸர்வ லோகானாம் - எல்லா லோகங்களுக்கும் குருவாக இருப்பவர்.

தக்ஷிணாமூர்த்தயே நம: - இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்தியை வணங்குகிறேன்


சுலோகம்:5


ஓம் நம : ப்ரணவார்தாய ஶுத்தஜ்ஞானைகமூர்தயே 

நிர்மலாய ப்ரஶாம்தாய தக்ஷிணாமூர்தயே நம : || 5 ||


ஓம் நம ப்ரணவார்த்தாய - ஓங்காரத்தின் அர்த்தமாக விளங்குபவர்.

மாண்டூக்ய உபநிஷதத்தில் ஓங்காரத்தின் பொருள் மிக விரிவாக கூறப்பட்டுள்ளது. ‘ஓம்எனும் சொல்லில் உள்ள, + + ம் முதலிய அங்கங்களுடன், ‘அமாத்ராஎன்று கூறப்படும் மெளனமும் ஓர் அங்கமாக அங்கு விளக்கப்படுகிறது. அதில் , மற்றும் ம் முதலியவைகள் சகுண ப்ரம்மத்தையும், ‘அமாத்ராநிர்குண ப்ரம்மத்தைக் குறிக்கிறது. ஓங்காரத்தின் உண்மையான பொருளான நிர்குண ப்ரம்ம சொரூபத்தை விளக்கும் தத்துவமாக இருப்பவர்.

சுத்34 ஞான ஏக மூர்த்தயே - தூய்மையான ஞானமாக, ஒரே சொரூபமாக இருப்பவர்.

சுத்தமான ஞானம் என கூறப்படுவதிலிருந்து, அசுத்தமான ஞானம் என ஏதேனும் உள்ளதா? எனில், ஆம். மனதில் தோன்றும் பொருள்களைப் பற்றிய எண்ணங்கள் அசுத்தமான அறிவு. ஏனெனில் அவைகள் தோன்றும் சிறிது காலத்தில் மறைந்து விடும். ஆனால் சொரூப ஞானம் என்றும் மறையாதது; அழியாதது

நிர்மலாய - அழுக்கற்றவர்க்கு; தூய்மையானவருக்கு

ஸ்தூலம், சூக்ஷமம் மற்றும் காரணம் என்ற மூன்று விதமான சரீரங்கள் அழுக்கு எனப்படுகிறது. இவ்விதமான அழுக்கற்றவருக்கு என்பது பொருள். தக்ஷிணாமூர்த்தி சரீர வடிவத்தில்தான் அமர்ந்துள்ளார் என்றபோதிலும் இவருக்கு அந்த சரீரத்தில்நான்என்ற அபிமானம் கிடையாது. ஆகவேநிர்மலாய’.

ப்ரசா1ந்தாய - சாந்தியுடன் அமர்ந்துள்ள; ஆனந்த ரூபமாக மகிழ்ச்சியுடன் காணப்படுகின்ற

தக்ஷிணாமூர்த்தயே நம: - இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்தியை வணங்குகிறேன்.

பொதுவாக தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம், நாம் பார்த்த இந்த ஐந்து தியான சுலோகதோடு உச்சாடனம் செய்யப்படுவது வழக்கம். இனி தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ர விளக்கத்தை காணலாம்.

------------------------------------------------------------------------------------------------------------